வேலூர் அருகே ஏரித்திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்பு
வேலூர்: வேலூர் அருகே நடந்த ஏரித்திருவிழாவில், நான்கு மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேலாங்காட்டில் உள்ள ஏரியின் மையப்பகுதியில், பொற்கொடியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமியன்று, ஏரித்திருவிழா கொண்டாடி வருகின்றனர். இது ஒரு புதுமையான விழாவாகும். பொது மக்கள் குடும்பத்தினருடன் ஏரிக்கு சென்று, அங்கேயே, மூன்று நாட்கள் தங்கி, ஆடு, கோழிகளை பலியிட்டு உணவு சமைத்து பொற்கொடியம்மனுக்கு படைத்து விட்டு, அதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுவர்.
மேலும், ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள், குறைந்தது, 100 பேருக்கு அங்கேயே இந்த உணவை கொடுத்து மகிழ்வர். இந்த விழாவில் பங்கேற்கும் பக்தர்கள், பச்சை ஓலைகளில் கூரை அமைத்த பச்சை மாட்டு வண்டி கட்டி வந்து பங்கேற்பர். வேலங்காடு, வல்லண்டராமம், ரெண்டேரிகோடி ஆகிய, மூன்று கிராமங்களை சேர்ந்தவர்கள், இந்த ஏரித்திருவிழாவை நடத்துவர். இதற்காக, இந்த, மூன்று கிராமங்களுக்கும் இந்த தேர் சென்று வரும். அதன்படி, நேற்று காலை, 8:00 மணிக்கு ஏரித்திருவிழா துவங்கியது. இதையொட்டி பொற்கொடியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜை செய்து, பல்லக்கில் எடுத்து வந்து தேரில் ஏற்றினர். காலை, 9:00 மணிக்கு, வேலங்காடு ஏரியில் இருந்து தேர் புறப்பட்டது. தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய, நான்கு மாநிலங்களைச் சேர்ந்த, ஒரு லட்சம் பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். இதை முன்னிட்டு, 2,000க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. கழிவறை வசதி, மருத்துவ முகாம் ஆகியவை மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர். வேலூர் மாவட்ட எஸ்.பி., பகலவன் தலைமையில், 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வேலூர், அணைக்கட்டு, ஆம்பூர், குடியாத்தம், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து, 80 சிறப்பு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.