பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை
ஊத்துக்கோட்டை : பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் நடந்த 18ம் ஆண்டு, திருவிளக்கு பூஜையில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளி கிராமத்தில் உள்ளது சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில், நேற்று முன்தினம், மாலை, 18ம் ஆண்டு திருவிளக்கு பூஜை கோலாகலமாக நடந்தது.
சந்தன காப்பு: அன்றைய தினம், காலை, மரகதாம்பிகை தாயாருக்கு பால், தயிர், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மூலவர் அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, 6:30 மணிக்கு நடந்த திருவிளக்கு பூஜையில் சுமங்கலிகள் மற்றும் இளம்பெண்கள் கலந்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
சித்திரை விழா: ஊத்துக்கோட்டை அடுத்த, ஆந்திர மாநிலம், தாசுகுப்பம், சென்னேரி ஏரிக்கரை அருகே உள்ளது தேவி கிருஷ்ண மாரியம்மன் கோவில். பழமை வாய்ந்த இக்கோவிலில் நடந்த சித்திரை மாத பவுர்ணமி விழாவில், காலை, 5:00 மணிக்கு யாக பூஜை, மதியம், 12:00 மணிக்கு அன்னதானம், மாலை, 6:00 மணிக்கு சீர்கொண்டு வருதல், விளக்கு பூஜை மற்றும் இரவு, 8:00 மணிக்கு சக்தி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.