’தினமலர்’ செய்தி எதிரொலி கோவில் குளத்திற்கு மதில் சுவர்
திருமழிசை : நமது நாளிதழில், வெளியான செய்தியை தொடர்ந்து, திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் குளத்திற்கு, 25 லட்சம் ரூபாயில், மதில் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. வெள்ளவேடு அடுத்துள்ள திருமழிசையில் அமைந்துள்ளது ஜெகந்நாத பெருமாள் கோவில். இந்த கோவிலுக்கு, சொந்தமான குளம், போதிய பராமரிப்பு இல்லாததால், அதன் சுற்றுச்சுவர் சிதிலமடைந்து இருந்தது. இதனால், குளத்தைச் சுற்றி, இரவு நேரங்களில் ’குடி’மகன்கள் மது அருந்தி வந்தனர். மேலும், மது அருந்திவிட்டு, பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் கவர்களை குளத்தில் வீசிச் சென்றனர். இதனால், குளம் மாசடைந்து வந்தது. இது குறித்தான செய்தி வெளியானதை அடுத்து, அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுத்து, உபயதாரர் நிதியின் மூலம், 25 லட்ச ரூபாய் செலவில், கோவில் குளத்தைச் சுற்றி, புதிய மதில் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில், பணிகள் நிறைவு அடையும் என, கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.