வீரபாண்டி சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்
தேனி, வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 9ம்தேதி துவங்கியது.தினமும் ஏராளமான பக்தர்கள் முல்லை பெரியாற்றில் நீராடி ஆடிப்பாடி கோயிலுக்கு அக்னி சட்டி , ஆயிரம் கண்பாணை ஏந்தி , முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பொங்கல் வைத்து வழிபடுகின்றனர். தினமும் அம்மன் முத்துப் பல்லக்கு , புஷ்ப பல்லக்குகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. மாலை 5:45 மணிக்கு கலெக்டர் வெங்கடாசலம், எஸ்.பி., பாஸ்கரன், எம்.எல்.ஏ., தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் ,தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் குறிப்பிட்ட துாரம் சென்றவுடன் நின்றது. இன்று மாலையும் தேரோட்டம் இழுக்கப்படும்.