திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில், நடந்து வரும் தீமிதி விழாவில், நேற்று, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம், மதுரா குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், 31ம் ஆண்டு, தீமிதி திருவிழா, கடந்த, 4ம் தேதி, பாரத கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு, 10:00 மணிக்கு நாடகமும் நடந்து வருகிறது. இது தவிர, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நேற்று, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. இதையொட்டி, யாகசாலை அமைத்து சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, உற்சவர் திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். வரும், 15ம் தேதி, அர்ச்சுனன் தபசு, 21ம் தேதி, காலை, துரியோதனன் படுகளம் மற்றும் அன்று மாலை, தீமிதி திருவிழா நடக்கிறது.