கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவில் திருத்தேர் உற்சவம்
செஞ்சி: கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன் கோவிலில் நடந்த தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டு அம்மச்சார் அம்மன், செல்வ விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் 17ஆம் ஆண்டு 10 நாள் மகா உற்சவம் மற்றும் 8ம் ஆண்டு தேர்திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 7ம் தேதி காலை 1008 பால் குடங்கள் ஊர்வலமும், தொடர்ந்து, செல்வ விநாயகர், அம்மச்சார் அம்மன், சீனுவாச பெருமாளுக்கு பால்குட அபிஷேகமும் நடந்தது. 8 ம் தேதி மழை வேண்டி அம்மச்சார் அம்மனுக்கு 108 இளநீர் அபிஷேகமும், வருண ஜபமும் நடந்தது.
கடந்த 12ம் தேதி பத்மினி தேவி மூர்த்தி தலைமையில் திருவிளக்கு பூஜையும் நடந்தது. 13ம் தேதி இரவு 12 மணிக்கு விநாயகர், ஸ்ரீநிவாச பெருமாள், அம்மச்சார் அம்மனுக்கு பூ பல்லக்கு நடந்தது. நேற்று காலை 9.30 மணிக்கு அம்மச்சார் அம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நடந்தது. மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞர் அணி தலைவர் செந்தில்குமார் வடம் பிடித்தலை துவக்கிவைத்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, பத்மினி தேவி மூர்த்தி தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வடம் பிடித்தனர். மாலை 3 மணிக்கு மகா புஷ்பாஞ்சலி நடந்தது. பக்தர்களுக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை நாராயணசாமி மற்றும் கிராம மக்கள் செய்தனர்.