விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், சின்னமட்டாரப்பள்ளி கிராமத்தில் உள்ள விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. இதையொட்டி,
கடந்த, 27ல் கங்கை பூஜை, கணபதி பூஜை, வாஸ்து பூஜை மற்றும் வாஸ்து ஹோமம் ஆகியவை நடந்தன. 28ல் வேத பாராயணம், கோபுர கலச அபிஷேகம், கோ பூஜை, வருண ஹோமம், தன்வந்திரி ஹோமம், லட்சுமி ஹோமம் மற்றும் துர்கா ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. நேற்று காலை, 4:00 மணிக்கு, வேதபாராயணம், ப்ரார்த்தக்கால பூஜை, தம்பதி பூஜை, மகாகணபதி மூலமந்திர ஹோமம், பிராண பிரதிஷ்டை உள்ளிட்ட பூஜைகள்
நடந்தன. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு, விஜய விநாயகர், நவக்கிரகங்களுக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் பங்கேற்க, சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், பூஜை தட்டுகளுடன் மேள, தாளம் முழுங்க ஊர்வலமாக வந்தனர். ஊர்வலத்தில், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டத்துடன் நாட்டுப்புற கலைஞர்கள் ஆடியபடி வந்தனர்.
* இதேபோல், தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபாலப்பட்டி புதூரில், புதூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.