உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் கோயில்களில் கூழ் ஊற்ற தானியம் வழங்க வேண்டும்

அம்மன் கோயில்களில் கூழ் ஊற்ற தானியம் வழங்க வேண்டும்

தேனி:ஆடி மாதம் அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றுவதற்கு அரசு தானியத்தை இலவசமாக வழங்க கோரி இந்து எழுச்சி முன்னணியினர் தேனி கலெக்டரிடம் மனுக்கொடுத்தனர்.தேனி இந்து எழுச்சி முன்னணி சார்பில், மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் அமைப்பின் நிர்வாகிகள், பெண்கள் மண் கலயங்களை சுமந்தும், வேப்பிலை மாலை அணிந்தும் கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர் நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்திக்க அனுமதித்தனர். நிர்வாகிகள் கலெக்டர் வெங்கடாசலத்திடம் வழங்கிய மனுவில், ஆடி மாதம் அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுவதற்கு அரிசி, கேழ்வரகு உள்ளிட்ட 25 டன் தானியங்கள் அரசு இலவசமாக வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினர்.பாலம் அமைக்க கோரிக்கை:போடி மேலச்சொக்கநாதபுரம் கரப்பட்டியை சேர்ந்த விவசாயிகள் ஜக்கையா, சீனிராஜ் ஆகியோர் கலெக்டரிடம் வழங்கிய மனு:கரட்டுப்பட்டி கழுகுமலை புலத்தில் 200 ஏக்கர் நிலம் விவசாயிகளுக்கு உள்ளது. 18 ம் கால்வாய் திட்ட பணிகள் தற்போது நடக்கிறது. இக் கால்வாய் மேற்கு பகுதியில் இருந்து கிழக்கு பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயிகள் செல்ல முடியாத வகையில் பாலம் அமைக்கின்றனர். கால்வாய் பணி துவங்கும் போது கல்குவாரி அருகே விவசாயிகள் வசதிக்காக பாலம் அமைத்து தரப்படும் என வாக்குறுதி அளித்தனர். இதனை மீறும் வகையில் தற்போது பாலம் அமைக்காமல் பணி நடக்கிறது. இதனால் விவசாயிகள், கால்நடைகள் ஆற்றை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட நேரிடும். எனவே, கரட்டுப்பட்டியில் கழுகுமலை புலத்திற்கு செல்ல பாலம் வசதி செய்திட வேண்டும் என கோரினர். பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !