வைகாசி விசாகம்: மருதமலையில் குழுமிய பக்தர்கள்!
கோவை: வைகாசி விசாகத்தை ஒட்டி, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனத்துக்காக, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர். முருகனின் ஏழாவது படைவீடாக பக்தர்களால் போற்றப்படும் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாகத்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலை 5:00 மணிக்கு, கருவறையிலுள்ள சுவாமிக்கு முன், அலங்கரிக்கப்பட்ட கோமாதா எழுந்தருளுவித்து, மங்கள வாத்தியங்களை முழங்க கோமாதா பூஜை நடந்தது. சுவாமிக்கு, பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட, சகலவித திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு தங்கக்கவசம், வைரக்கிரீடம் அணிவிக்கப்பட்டது. சுவாமி ராஜஅலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் பரிமாறப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தங்க ரதத்தில், சுவாமி எழுந்தருளி காட்சியருளினார். பக்தர்கள் வடம் பிடித்து தங்கத்தேரை இழுத்தனர். வைகாசி விசாகத்தை ஒட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் சுவாமிதரிசனம் மேற்கொண்டனர். சிறப்பு தரிசனத்துக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேற்று, பத்தாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கோவையில் உள்ள பல்வேறு முருகன் கோவில்களிலும் நேற்று வைகாசி விசாகம் சிறப்பாக நடைபெற்றது.