உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து கோயிலில் 10 நாட்கள் உற்சவருக்கு பூஜைகள் இல்லை

குன்றத்து கோயிலில் 10 நாட்கள் உற்சவருக்கு பூஜைகள் இல்லை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 நாட்களுக்கு உற்சவர் சுப்பிரமணிய சவாமி, தெய்வானைக்கு பூஜைகள் இல்லை. ஸ்ரீபலி நாயகர் புறப்பாடு இல்லை. தங்கரதம் புறப்பாடும் இல்லை. கோயிலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு தினம் ஆறுகால பூஜைகள் நடக்கும். திருவிழாக்களின்போது வீதி உலா நிகழ்ச்சியில் உற்சவர் புறப்பாடாகி அருள்பாலிப்பார். தினம் காலை, மாலையில் கோயில் நந்தி மண்டபத்தை தலா மூன்று சுற்றுக்களும், கோயிலின் கொடியேற்ற திருவிழாக்களில் புறப்பாடும், பிரதோஷத்தன்று நந்தி மண்டத்தை மூன்று முறையும் ஸ்ரீபலி நாயகர் சுற்றி வருவர்.

உற்சவர் மற்றும் ஸ்ரீ பலி நாயகர் ஐம்பொன் விக்ரகங்கள் மற்றும் பீடத்திலும் ஜடி பந்தன திருப்பணிகளுக்கான பாலஸ்தாபன பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. சுவாமி விக்ரகங்களிலிருந்து புனிநீர் கும்பத்தில் சக்தி கலை இறக்கம் செய்யப்பட்டு விசாக கொறடு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை சுவாமிகளின் சித்திரங்களில் சக்தி கலை ஏற்றம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. சுவாமிகளின் விக்ரகங்களுக்கு 10 நாட்கள் திருப்பணிகள் நடக்க இருப்பதால், அதுவரை சித்திரங்களுக்கே பூஜைகள் நடக்கும். அதுவரை தங்கரதம் புறப்பாடும் இல்லை. பணிகள் முடிந்து உற்சவருக்கு கும்பாபிஷேகம் நடக்கும். அதன்பின்பு உற்சவருக்கு பூஜைகள் நடக்கும். தங்கவேல் திருப்பணி: கோயிலில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு நேற்று முன்தினம் திருப்பணிகள் முடிந்து நேற்று புனித நீர் அபிஷேகம் முடிந்து மீண்டும் மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. நேற்று முதல் வேலுக்கு பால் அபிஷேகம் துவங்கியது. என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !