உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில், சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பஞ்., புதிய வீட்டு வசதி வாரிய, இரண்டாவது குடியிருப்பு பகுதியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் கோவிலில், புதிதாக வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில், காலபைரவர் கோவில் மற்றும் நவக்கிரஹங்கள் பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கடந்த, 8 காலை, 10:30 மணிக்கு, கோவில் நந்தவன திறப்பு நிகழ்ச்சியும், மாலை, 5:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி மற்றும் காலபைரவர் கரிக்கோல் ஊர்வலமும் நடந்தது. 9 காலை, 9:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவகிரஹ ஹோமமும், மாலை, 5:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, ரக் ஷாபந்தனம், கும்ப அங்காரம், கலசாகர்ஷனம், முதற்கால யாக பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜையும், பூர்ணாஹுதி தீபாராதனையும், மாலை, 5:00 மணிக்கு, விசேஷ சாந்தி, மூன்றாம் கால யாக பூஜையும், அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று கும்பாபிஷேக விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, நான்காம் கால யாக பூஜையும், காலை, 7:30 மணிக்கு மஹா பூர்ணாஹுதி யாத்ராதானம் கலச புறப்பாடும், 8:15 மணிக்கு, கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !