சபரிமலையில் மாளிகைப்புறம் நாகர் சன்னதி மாற்றி அமைப்பு
சபரிமலை: சபரிமலையில் மாளிகைப்புறம் நாகர் சன்னதி மாற்றி அமைக்கப்பட்டு நேற்று பிரதிஷ்டை நடந்தது. 25-ம்தேதி காலை 11 மணிக்கு புதிய தங்க கொடிமர பிரதிஷ்டை நடக்கிறது.
சபரிமலை தேவபிரஸ்ன விதிப்படி, புதிய கொடிமர பிரதிஷ்டைக்கு முன்னால் மாளிகைப்புறத்தம்மன் கோயில் சுற்றுப்புறங்களில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி மலை தெய்வங்களை தற்போதைய இடத்தில் இருந்து மாற்றி மணி மண்டபம் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுபோல நாகர் சன்னதி மாற்றப்பட்டு மாளிகைப்புறம் கோயிலின் கன்னிமூலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரரு பிரதிஷ்டை நடத்தினார். புதிய தங்க கொடிமரம் அமைக்கும்பணி வேகமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னோடி பூஜைகள் தற்போது சபரிமலையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மிருத்துஞ்சய ஹோமமும், நேற்று அற்புதசாந்தி ஹோமமும் நடந்தது. இன்று சுக்ர்த ஹோமமும், நாளை தத்துவ ஹோமமும் நடக்கிறது. 25-ம் தேதி காலை 11 மணிக்கு தங்க கொடி மர பிரதிஷ்டை நடக்கிறது.கொடிமரத்தின் உச்சி யில் வைக்கப்படும் குதிரை வாகனம் பவனியாக சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. தந்திரி கண்டரரு அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தி தண்ணீரில் வைக்கப்பட்டுள்ளது. தேவசம்போர்டு தலைவர் கோபால கிருஷ்ணன் பிரதிஷ்டை பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.