உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த கட்டண பார்க்கிங்!

ஐயப்ப பக்தர்கள் வாகனங்கள் நிறுத்த கட்டண பார்க்கிங்!

மதுரை:சபரிமலை சீசன் துவங்கியதை முன்னிட்டு, மதுரை வரும் வெளிமாநில மற்றும் மாவட்ட பக்தர்களின் வாகனங்களுக்கு எல்லீஸ்நகரில் கட்டண பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.சபரிமலை செல்லும் வழியிலும், சென்ற பிறகும் மதுரை வழியாக பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வரும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதன்காரணமாக, பழங்காநத்தம், ஷாப்பிங் காம்பளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் மற்றும் எல்லீஸ்நகர் ரோட்டில் பக்தர்களின் வாகனங்களை தற்காலிகமாக நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். இது மேலும் நெரிசலுக்கு வழிவகுக்கும். ஆண்டுதோறும் நடக்கும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, எல்லீஸ்நகரில் மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான காலி இடங்களில் "பார்க்கிங் செய்ய போலீசார் முயற்சி எடுக்க தினமலர் இதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டியது.இதன் எதிரொலியாக, எல்லீஸ்நகர் போலீஸ் அவுட்போஸ்ட் அருகே, கோயில் சார்பில் திருமண மண்டபம் கட்டப்படும் காலி இடத்தில் கட்டண "பார்க்கிங் வசதி நேற்று ஏற்படுத்தப்பட்டது. எட்டு மணி நேரத்திற்கு கட்டணமாக பஸ்சிக்கு ரூ.50, வேனுக்கு ரூ.35, காருக்கு ரூ.20 என நிர்ணயிக்கப்பட்டது. கோயில் நிர்வாகம் கட்டணம் வசூலிக்கும். அதேசமயம், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை. நிர்வாக அதிகாரி ஜெயராமன் கூறுகையில், ""சோதனை அடிப்படையில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டணமில்லா பார்க்கிங் வசதிக்கு திட்டமிட்டோம். இதனால் உள்ளூர்காரர்கள் வாகனங்களை பல மணி நேரம் நிறுத்த வாய்ப்புண்டு. இதை தவிர்க்கவே, எட்டு மணி நேரம் கட்டணம் வசூலிக்க முடிவு செய்தோம். இம்முயற்சிக்கு வரவேற்பு இருக்கும் பட்சத்தில், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !