குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு!
குற்றாலம் : கார்த்திகை மாதம் பிறந்ததை அடுத்து சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டனர். சபரிமலைக்கு மாலை அணிவிக்கும் ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்து புனித நீராடி மாலை அணிவிப்பது வழக்கம். நேற்று நெல்லை மாவட்ட பகுதிகள் மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த திரளான ஐயப்ப பக்தர்கள் குற்றாலம் வந்தனர். குற்றாலம் மெயினருவியில் குளித்து அருவிக்கரையில் வீற்றிருக்கும் செண்பகவிநாயகர் கோயில் மற்றும் குற்றாலநாதர்-குழல்வாய்மொழி அம்பாள் கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடுகள் செய்து மாலை அணிவிந்து விரதத்தை துவக்கினர். இதன் காரணமாக அருவிக்கரை பகுதி முழுவதும் "சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் எங்கும் ஒலித்தது. அதிகாலையிலேயே அருவிப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது ஐயப்ப பக்தர்களை வரவேற்கும் வகையில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. பக்தர்கள் நலன் கருதி போலீஸ் பாதுகாப்பு வசதியும் ஏற்படுத்தப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.