பவானியம்மன் கோவிலில் ஆடி விழா துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்
ஊத்துக்கோட்டை: பவானியம்மன் கோவிலில், ஆடி மாத விழா குறித்து, அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பழமை வாய்ந்தது. ஆடி மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 13 வாரங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் சென்று, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, அம்மனை வழிபடுவர். பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை எல்லாபுரம் ஒன்றிய நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறது. இது குறித்து கூட்டம், ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறும். பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான வசதிகள் குறித்து தெரிவிப்பர். இந்த தகவல்களை பெற்றுக் கொண்டு ஒன்றிய அதிகாரிகள் 30 லட்சம் ரூபாய் அளவிற்கு சுகாதாரம் உள்ளிட்ட துறைகளுக்கு செலவழிப்பர். மேலும், ஒவ்வொரு ஆண்டும், கோவில் நிர்வாகத்திடம் இருந்து செலவுத் தொகையை கேட்டு கணக்கு அனுப்பி வைப்பர். இந்த கூட்டங்களில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
இந்நிலையில், நேற்று, மதியம், 3:00 மணிக்கு, பவானியம்மன் கோவில் ஆடி மாத விழா குறித்த கூட்டம் எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளின் உதவி இயக்குனர் (தணிக்கை) முத்துக்குமார் தலைமையில் நடந்தது. இதில் ஒன்றிய ஆணையர்கள் சுதா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலை, சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். நேற்று, ஒன்றிய ஆணையர் அறையில் அதிகாரி கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. பின், இது குறித்து முத்துக்குமார் கூறுகையில், ’ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமான பணிகளை அந்தந்த துறையினர் மேற்கொள்வர். சில ஆண்டுகளாக, கோவில் நிர்வாகம் வழங்க வேண்டிய தொகையை வழங்கவில்லை. ’இந்தாண்டு, 30 லட்சம் ரூபாய், ஆடி மாதம் இரண்டாவது வாரம் வழங்குவதாக கூறியுள்ளனர்’ என்றார்.