செல்வமாரியம்மன் கோவில் திருவிழா: குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஈரோடு: செல்வமாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். ஈரோடு, பெரியசேமூர் பொன்னிநகரில் எழுந்தருளியுள்ள, செல்வ மாரியம்மன் கோவில் பொங்கல், குண்டம் திருவிழா, ஜூன், 27ல், கொடியேற்றம் மற்றும் கம்பம் நடுதலுடன் தொடங்கியது. கம்பத்திற்கு பக்தர்கள் தினமும், தீர்த்தம் நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். நேற்று முன்தினம், காவிரி சென்று தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு அபி?ஷகம், அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதிகாலை, கோவில் முன் அமைக்கப்பட்ட, குண்டத்தில், கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து வேண்டுதல் வைத்து கங்கணம் கட்டி விரதமிருந்தவர்களும், வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும் வரிசையில் காத்திருந்து, குண்டம் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர், பொங்கல் வைத்தல், மாலை மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. இன்று காலை கம்பம் எடுத்து ஊர்வலமாக வருதல், மஞ்சள் நீராட்டு, அம்மன் திருவீதியுலா ஆகியவை நடக்கிறது. நாளை மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.