அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரமோற்சவ திருவிழா
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். ரிஷிவந்தியத்தில் உள்ள 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 28 ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பஞ்சமூர்த்திகள் சர்வ அலங்காரத்துடன் திருவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் பாரிவேட்டை உற்சவத்தில் சுவாமி மான் வாகனத்தில் எழுந்தருளினார்.
9ம் நாளான நேற்று, மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு தேனபிஷேகமும், அதைத்தொடர்ந்து அலங்கார ஆராதனைகளும் நடந்தது. நாகராஜ், சோமு குருக்கள் பூஜைகளை செய்தனர். அதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகளை பக்தர்கள் தோளில் சுமந்து தேருக்கு புறப்பாடு நடந்தது. கோவில் வாசலில் மண்டகப்படி நிகழ்ச்சி கந்தவிலாஸ் ஜெயக்குமார் தலைமையில் நடந்தது. மாலை 3 மணிக்கு முருகமூப்பர் வகையறா தலைமையில் பூஜைகள் செய்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோஹரா கோஷம் முழங்க 61 அடி உயர தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில்,எம்.எல்.ஏ., வசந்தம்.கார்த்திகேயன், இந்துசமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி, திருக்கோவிலுார் டி.எஸ்.பி., (பொறுப்பு) சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.