சீதாராம் சுவாமியின் யாத்திரை: கன்னியாகுமரியில் நாளை நிறைவு
நாகர்கோவில்: நாடு முழுவதும் சீதாராம் சுவாமிகள் நடத்திய ’பாரத பரிக்கிரம யாத்திரை’ கன்னியாகுமரியில் நாளை (ஜூலை ௯) நிறைவடைகிறது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பாகவத் கலந்து கொள்கிறார்.கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே புத்துாரை சேர்ந்தவர் சீதாராம் சுவாமி. பள்ளி பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இணைந்தார். அகில பாரத ஆர்.எஸ்.எஸ்., சேவா பிரமுக் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். கிராமங்களின் வளர்ச்சிக்காக, நாடு முழுவதும் நடைப்பயணத்தை 2012- ஆக., ௯ல் கன்னியாகுமரியில் தொடங்கினார். மொத்தம் 1797 நாட்களில் 23 மாநிலங்கள், 2,350 கிராமங்கள், 23 ஆயிரத்து 100 கி.மீ., சென்றார். இப்பயணம் கன்னியாகுமரியில் நாளை நிறைவடைகிறது. விழாவில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் மற்றும் சீதாராம் சுவாமி பிரசாரம் செய்த கிராமங்களை சேர்ந்த பலர் பங்கேற்கின்றனர். மாலை ௪:௦௦ மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோகன் பாகவத் பேசுகிறார்.
இதுகுறித்து சீதாராம் சுவாமி கூறியது: நல்ல சிந்தனையுடன் யாத்திரை நடந்ததால், நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய கிராமங்களில் பயங்கரவாதம் என்ற பெயரில் உடல் ஆக்கிரமிப்பும், கல்வி என்ற பெயரில் அறிவு மீது ஆக்கிரமிப்பும் நடக்கிறது. ஆங்கிலம் வேண்டும் என்பவர்கள், ஹிந்தி வேண்டாம் என்பது விந்தை. பசு தாய் போன்றது; தாயை வீட்டில் இருந்து பிடித்து சென்றால் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? இப்பிரச்னையில் விமர்சனம் வரும்போதுதான் உண்மை வௌிவரும். இவ்வாறு கூறினார்.