உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி மாத எருதாட்ட விழாவுக்கு தயாராகும் நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவில்

ஆடி மாத எருதாட்ட விழாவுக்கு தயாராகும் நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவில்

நெய்காரப்பட்டி: சேலம், நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில், ஆடி மாத பொங்கல் விழா மற்றும் எருதாட்ட விழாவையொட்டி, சுவாமி சிலைகளை சுத்தம் செய்து, வண்ணம் தீட்டும் பணி நடந்து வருகிறது. சேலம், நெய்காரப்பட்டி மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் நடக்கும் எருதாட்ட விழாவில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, நூற்றுக்கணக்கான மாடுகளை கொண்டு வந்து, எருதாட்டம் நடத்துவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று கோவில் மாடுகளை மட்டும், கோவிலை வலம் வரச்செய்து, விழாவை நடத்தி வருகின்றனர். இந்தாண்டு, ஆடி மாத விழாவையொட்டி, மூங்கில்குத்து முனியப்பன் கோவிலில் உள்ள, எட்டு முனியப்பன் சுவாமி சிலைகளையும், சுத்தம் செய்து வண்ணம் தீட்டி புதுப்பொலிவு ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, பொங்கல் வைபவம் மற்றும் பாரம்பரியமான எருதாட்ட நிகழ்ச்சி வரும் ஜூலை, 20ல் நடக்கிறது. நெய்காரப்பட்டி, கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், அரியானூர் மற்றும் வெளியூர்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பொங்கல் வைத்து, முனியப்பனை வழிபட்டு செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !