இன்று பவுர்ணமி: நாராயணவனத்தில் தீபம்
பவுர்ணமியை ஒட்டி, இன்று இரவு நிலவுக்கு தீபாராதனை நடத்தும் நிகழ்ச்சி, பல்வேறு கோவில்களில் நடைபெற உள்ளது. நாராயணவனம் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. தினமும் காலையில் வணங்கும் சூரியனுக்கு, தை மாதம் முதல் நாளில், பொங்கல் இட்டு, படையல் வைத்து மக்கள் வழிபடுகின்றனர். அதே போல், நிலவுக்கு, பவுர்ணமி நாளில், சிறப்பு வழிபாடு நடத்துகின்றனர்.ஆனி மாதம் பவுர்ணமி நாளான இன்று இரவு, 7:00 மணிக்கு, அம்மையார்குப்பம் பொன்னியம்மன் கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடக்கிறது. தொடர்ந்து, கொடி மரம் அருகே, நிலவுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. இதே போல், வெள்ளாத்துார் வெள்ளாத்துாரம்மன் கோவில், பொதட்டூர் பேட்டை பொன்னியம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது. பாண்டரவேடு தொப்பையம்மன் கோவிலில், இரவு, 8:00 மணிக்கு, மகா யாகம் மற்றும் நள்ளிரவு, 12:00 மணி வரை பஜனையும் நடக்கிறது. பிரசித்தி பெற்ற நாராயணவனம் கைலாசநாதர் நீர்வீழ்ச்சி மலை சிகரத்தில், உச்சி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பவுர்ணமி நாளில், இங்கு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். இன்று மாலை, 6:00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், நாராயணவனம், கீழகரம் கிராமத்தில் உள்ள வீடுகளிலும் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.