கிருஷ்ணகிரி பாண்டுரங்கன் கோவிலில் ருக்மணி திருக்கல்யாணம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சிவாஜி நகரில் உள்ள பாண்டுரங்க ருக்மணி கோவில் பிரமோற்சவ விழாவையொட்டி, நேற்று திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த அக்ஹாரம் சிவாஜி நகரில் உள்ள பாண்டுரங்க ருக்மணி கோவில் பிரமோற்சவ விழா, கடந்த, 3 காலை கணபதி அபிஷேக ஆராதனையுடன் துவங்கியது. 4 அதிகாலை, 4:00 மணிக்கு விட்டல் ரகுமாயி, அம்பா பாவனிக்கு அபிஷேக ஆராதனைகளும், மாலை, 7:00 மணிக்கு, விட்டல் ரகுமாயி உற்சவமூர்த்தி வீதி உலாவும் நடந்தது.
நேற்று காலை, 7:00 மணிக்கு, அம்பா பவானிக்கு சிறப்பு அபிஷேகமும், தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு ருக்மணி திருக்கல்யாணம் நடந்தது. திருக்கல்யாணத்தைத் தொடர்ந்து, ஒரு மணி நேரம் சிறப்பு பஜனை நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, அம்பா பவானியின் பஜனை பாடல்களை பாடி மகிழ்ந்தனர். மாலை, 5:00 மணிக்கு தேர் அலங்காரத்தில் விநாயகர், விட்டல் ரகுமாயி, அம்பா பவானி உற்சவ மூர்த்திகள் கிருஷ்ணகிரி நகரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த விழாவில், பெங்களூரு, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.