வேலுார் ராமகிருஷ்ணா மடத்தில் குரு பூர்ணிமா விழா
வேலுார்: நாட்றம்பள்ளி, ராமகிருஷ்ணா மடத்தில் நடந்த குரு பூர்ணிமா விழாவில், ஏராளமானோர் பங்கேற்றனர். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த நாட்றம்பள்ளியில், 108 ஆண்டுகள் பழமையான ராமகிருஷ்ணா மடம் உள்ளது. இங்கு, குரு பூர்ணிமா விழா, நேற்று காலை, 5:00 மணிக்கு மங்கள ஆரத்தி, சுப்ரபாதத்துடன் துவங்கியது. காலை, 8:00 மணிக்கு, சிறப்பு பூஜை, வேத பாராயணம், பஜனை நடந்தது. 9:30 மணிக்கு, 108 ராமகிருஷ்ண போற்றி நடந்தது. இதில், வேலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர், 300 பேர் பங்கேற்றனர். காலை, 10:30 மணிக்கு ராமகிருஷ்ணர் ேஹாமம், ராமகிருஷ்ணர் குரு பூஜை நடந்தது.
தொடர்ந்து, ராமகிருஷ்ணர் குறித்த சிறப்பு சொற்பொழிவு நடந்தது. இதில், நாட்றம்பள்ளி ராமகிருஷ்ண மடத்தின் தலைவர், சுவாமி தியாக ராஜானந்தா பேசியதாவது: புதிய இடத்திற்கு போக நேர்ந்தால், விஷயம் தெரிந்த வழிகாட்டி ஒருவர் சொற்படி நடக்க வேண்டும். அப்படியே கடவுளை அடைவதற்கான பாதையிலும், உண்மையான குரு ஒருவருடைய அறிவுரையை மட்டும் ஏற்று நடக்க வேண்டும். கங்கையை போன்றவர் குரு. குப்பையை எல்லாம் மக்கள் கங்கையில் வீசுகின்றனர். ஆனாலும், கங்கையின் புனித தன்மை குறைதில்லை. அதுபோல, நிந்தை, அவமானம், வெறுப்புக்கு மேலாக குரு இருக்கிறார். குருவின் வார்த்தைகளை நம்ப வேண்டும். குரு என்பவர் பரம்பொருள். குரு சொல்வதை, ஒரு குழந்தை போல அப்படியே நம்பி நடந்தால் தான், இறைவன் அருள் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, விசேஷ ஆரத்தி, மலர் அஞ்சலி, அன்னதானம் நடந்தது. ஏராளமானோர் பங்கேற்றனர்.