உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஒற்றுமையை ஏற்படுத்தும் மண் குதிரை

ஒற்றுமையை ஏற்படுத்தும் மண் குதிரை

மானாமதுரை: மானாமதுரை,அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஆனி, ஆடி மாதங்களில்  காவல் தெய்வமான அய்யனார் கோவிலுக்கு கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என்றும்,ஊரில் நோய்,நொடி அண்டாமல் இருக்க வேண்டி பல்வேறு பிரார்த்தனைகளுக்காக கிராமத்தினர் ஒன்று கூடி ஊரில் காப்புக்கட்டி  விரதம் இருந்து மானாமதுரையில் இருந்து மண்ணால் ஆன குதிரைகளை நடந்தே தங்களது உற்றார்,உறவினர்களோடு சேர்ந்து துாக்கி வந்து அய்யனார் கோவிலுக்கு முன்பாக வைத்து சிறப்பு பூஜை செய்வர். ,அபிேஷக ஆராதனைகளும் நடத்துவர்.இதற்காக அவர்கள் மானாமதுரையில் காலம்,காலமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளிகளிடம் விழா ஆரம்பமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே ஆர்டர் கொடுத்து விடுகின்றனர். அவர்களும் தெய்வ காரியம் என்பதால் விரதம் இருந்து இந்த  குதிரை மற்றும் காளை மாடுகள்,சாமி சிலைகள் ஆகியவற்றை செய்து கொடுக்கின்றனர்.  

சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: இந்த குதிரை எடுப்பு திருவிழா ஒவ்வொரு ஊர்களில் வருடந்தோறும்,அல்லது 3 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும். அப்போது கிராமத்தினர் ஊர் கூட்டம் போட்டு அனைத்து வீடுகளிலும் வரி வசூல் செய்து மொத்தச்செலவையும் கிராமத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக விழா நடத்துவதால் கிராமத்தினரிடையே ஜாதி மற்றும் மதங்களை கடந்து ஒற்றுமையை ஏற்படுத்துகிறது என்றும் பிரச்னைகளால் பிரிந்து போன உறவினர்களையும் இந்த திருவிழா சேர்த்து  வைப்பதாகவும் கூறினர்.மேலும் இந்த விழாக்களின் போது திருமணத்தடை, குழந்தைப்பேறு போன்றவற்றிற்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்தால் அடுத்த வருடம் திருவிழாக்களின் போது அவர்களின் வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறுவதாகவும் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !