அவிநாசி கோவிலில் சங்காபிஷேக விழா
அவிநாசி : அவிநாசி கோவிலில் நேற்று 1,008 சங்காபிஷேக விழா மற்றும் ஏகாதச ருத்ர ஜபம் ஆகியன நடந்தன. திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான பெருங்கருணாம்பிகை அம்மன் உடனுறை அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில், கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை (திங்கட்கிழமை) முன்னிட்டு 1,008 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது. திருக்கல்யாண உற்சவ மண்டபத்தில், 1,008 இடம்புரி சங்குகளும், பிரதானமாக வலம்புரி சங்கும் லிங்க வடிவில் வைக்கப்பட்டது. அதில், தீர்த்தம் நிரப்பப்பட்டு, கணபதி ஹோமத்துடன் ஏகாதச ருத்ர ஜபம் நடந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட சங்குகள் பிரகார உலாவாக எடுத்து வரப்பட்டு, அவிநாசியப்பருக்கு மஹா அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாட்டுக்கு பின், அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில், கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், பஞ்சமுக அர்ச்சனை குழு நிர்வாகிகள் சிவக்குமார குருக்கள், ராமநாத சிவம், நடேச குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் பங்கேற்றனர். இதையடுத்து அவிநாசியப்பருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.