சத்ய சாய் சேவா திட்டங்களை பார்த்து அரசு வியக்கிறது : அகில இந்திய தலைவர் பெருமிதம்
சத்ய சாய் சேவா நிறுவனங்களின் திட்டங்களை பார்த்து, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வியப்படைகின்றனர், என அந்நிறுவனங்களின் அகில இந்திய தலைவர் நிமிஷ் பாண்டியா தெரிவித்தார்.
சத்ய சாய் சேவா நிறுவனங்கள் மக்களுக்காக மேற்கொள்ளும்ம் திட்டங்கள், சேவைகள் குறித்து, நிமிஷ் பாண்டியா கேட்டறிந்து வருகிறார். ஜூலை 22 முதல், தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, மாநாடுகளில் பங்கேற்கிறார். சென்னையில் நடந்த முதல் மாநாட்டில் பங்கேற்றஅவர், நேற்று ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள சுந்தரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியதாவது: தனி மனிதனின் ஒழுக்கமும் மேம்பட வேண்டும். இதற்குத் தான் இறைவன் பாபாவாக அவதாரம் எடுத்தார்; போதனையும் செய்து கொண்டிருக்கிறார். மனிதர்களுக்கு மிக முக்கியமானது தன்னம்பிக்கை. அதை உணர்த்துவது, சத்ய சாய் சேவை நிறுவனங்கள் தான். தி.நகரில் சிறப்பு மாணவ, மாணவியருக்கு பயிற்சி கொடுத்து, அவர்களை, பிஎச்.டி., முடிக்க வைத்துள்ளது, இந்த நிறுவனங்களின் சாதனை.
சாய் பாபாவால், 2002ல், பேரிடர் மேலாண்மை திட்டம் துவக்கப்பட்டது. அதன் மூலம், இன்று இந்திய அளவில், காவல், தீயணைப்பு, வனத்துறை, சிறப்பு காவலர் உள்ளிட்டோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. சிறுவர்களுக்காக பால விகாஷ் என்ற பொக்கிஷத்தை, பாபா வரையறுத்துள்ளார். அந்த கல்வித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் மட்டும் 80 ஆயிரம் சிறார்கள் பயனடைகின்றனர்.சத்ய சாய் நிறுவனங்கள் சார்பில், இதுவரை நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில், நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன் அடைந்துள்ளனர். இதற்காக, 16 ஆயிரம் மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், 1.17 லட்சம் செவிலியர்கள் சேவையாற்றி உள்ளனர். இம்முகாம்கள், 37.29 கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டுள்ளன. நிறுவனங்களின் திட்டங்களை பார்த்து, அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் வியப்படைகின்றனர். சாய் நிறுவனங்களுடன் இணைந்து, யார் வேண்டுமானாலும் சேவையாற்ற வரலாம். இளைஞர்களுக்கு இலவசமாக தொழில் பயிற்சி அளித்து, அப்பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து, தொழில் முனைவோராக மாற்றி வருகிறோம். சத்ய சாய் நிறுவனங்களுக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை. குமரி முதல் இமயம் வரை சத்ய சாய் நிறுவனங்களின் சார்பில் தன்னலமற்ற சேவையாற்றி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -