உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி விழா: காஞ்சியில் சிலை தயாரிப்பு

கிருஷ்ண ஜெயந்தி விழா: காஞ்சியில் சிலை தயாரிப்பு

கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி, கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணி, காஞ்சிபுரத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.கோகுலாஷ்டமி என அழைக்கப்படும், கிருஷ்ணஜெயந்தி விழா, ஆகஸ்ட், 14ம் தேதி, நாடு முழுவதும், கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, சின்ன காஞ்சிபுரம், பொம்மைகார தெரு என அழைக்கப்படும், அஸ்தகிரி தெருவில், 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், கிருஷ்ணர் சிலைகள் தயாரிக்கும் பணியில், இரவு, பகலாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பாரம்பரிய தொழில்:
இத்தொழிலில் ஈடுபட்டுள்ள என்.சுரேஷ் கூறியதாவது,என் முன்னோர்கள் காலத்தில் இருந்தே, எனது சகோதரர்கள் ஐந்து பேரும், இத்தொழிலில், பாரம்பரியத்துடன், ஈடுபட்டு வருகிறோம். எங்களது வாரிசுகளும் பள்ளி, கல்லுாரிகளில் படித்தாலும், படிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில், தொழிலில் உறுதுணையாக உள்ளனர். கிருஷ்ணர் சிலைகள் மட்டுமல்லாமல், விநாயகர், ஐயப்பன் சிலைகளும், நவராத்திரி கொலு பொம்மைகளையும் செய்து வருகிறோம்.

கொலு பொம்மைகள்: காலத்திற்கேற்ப பாகுபலி விநாயகர், வியாசருடன் அமர்ந்து, எழுத்தாணியால் மகாபாரதம் எழுதும் விநாயகர், குழந்தையாக தவழும் குழந்தை விநாயகர் என, ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சிலை வடிவமைப்பில், புதுமையை புகுத்தி வருகிறோம்.அரை அடி முதல், 10 அடி உயர, விநாயகர் சிலைகளும், அரை அடி முதல், இரண்டரை அடி, வரை கிருஷ்ணர் சிலைகளும் செய்கிறோம். அதேப்போன்று, நவராத்திரி கொலு வைப்பதற்கு, பல்வேறு செட்டு களில், நவராத்திரி பொம்மைகள் செய்கிறோம். 40 பொம்மைகள் கொண்ட, காஞ்சி வரதராஜப்பெருமாள், கருடசேவை செட், கொலுபொம்மையை யும் புதிதாக உருவாக்கிஉள்ளோம்.

வங்கிக்கடன் தேவை:
நாங்கள் செய்யும் பொம்மைகளை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, வாங்கி செல்கின்றனர். சென்னை காதிகிராப்ட்டில், ஆண்டுதோறும், நாங்கள் செய்யும் பொம்மைகளைத்தான், நவராத்திரி விழா, கொலு கண்காட்சியில் வைக்கின்றனர் என்பது, எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.ஆண்டு முழுவதும், இத்தொழிலில் ஈடுபட்டாலும், சீசன் நேரத்தில் மட்டுமே வருமானத்தை பார்க்க முடியும். மேலும், மழைக்காலத்தில் தொழில் செய்ய முடியாது. வங்கிகளில், கடனுதவி வழங்கினால், இத்தொழிலை மேம்படுத்தி, பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !