சொரிமுத்தையனார் கோயிலில் ஆடி அமாவாசை விழா கோலாகலம்
திருநெல்வேலி: ஆடிஅமாவாசையையொட்டி காரையார் சொரிமுத்தையனார் கோயிலில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடுகள் நடத்தினர். நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையில், தாமிரபரணி நதி பாயத்துவங்கும் இடத்தில் காரையாறு வனப்பகுதியில் சொரிமுத்தையனார் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிஅமாவாசை விழா விமரிசையாககொண்டாடப்படுகிறது. விழாவில் நெல்லை, துாத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து திரளானவர்கள் வந்திருந்தனர். அங்கேயே குடில் அமைத்து சமையல் செய்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து வழிபாடுகள் நடத்துகின்றனர். பக்தர்கள் பொங்கலிட்டு சொரிமுத்தையனாரையும், சங்கிலி பூதத்தாரையும் வழிபட்டனர். நிகழ்ச்சியில் பரம்பரை அறங்காவலர் முருகதாஸ் தீர்த்தபதி உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். பக்தர்கள் அங்கேயே தங்கியிருந்து வழிபாடுகள் நடத்துவதால் கழிப்பறைகள், குடிநீர், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.