ஆடி அமாவாசையை முன்னிட்டு குண்டாற்றில் மக்கள் தர்ப்பணம்
திருச்சுழி: திருச்சுழி குண்டாற்றில் ஏராளமான பக்தர்கள் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.பூர்வ புண்ணிய ஸ்தான பலம் குறைந்தவர்கள், சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் என்று கூறுவர். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை அன்று சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோயிலில் அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது வழக்கம். அமாவாசை திதி மாதந்தோறும் வந்தாலும், ஆடி அமாவாசயைன்று வரும் திதிக்கு அதிக சிறப்பு உண்டு. ஆடி அமாவாசை, முன்னோர்களை நினைத்து பிதுர் தர்ப்பணம் செய்துவதற்கு ஏற்ற காலமாக இருப்பதால், அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் விரதம் இருப்பர். புண்ணிய நதிகள், ஆறுகளில் நீராடி தர்ப்பணம் செய்வர். இதன்படி அருப்புக்கோட்டை அருகே திருச்சுழி குண்டாற்றில், முன்னோர்களுக்கு நேற்று ஏராளமான மக்கள் திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர். பின்னர், பூமிநாதசுவாமி கோயிலுக்கு சென்று, தீபம் மற்றும் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டனர்.