17 கோவில் குளங்கள் ரூ.1.75 கோடியில் சீரமைப்பு
சென்னை:சென்னையில், 17 கோவில் குளங்களை, 1.75 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த, சென்னை மாநகராட்சி புதிய திட்டம் வகுத்துள்ளது.சென்னை மாநகராட்சி, நீர்நிலைகளை மேம்படுத்த புதிய திட்டம் வகுத்துள்ளது.இதன்படி, அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் பராமரிப்பு இல்லாத கோவில் குளங்களை மேம்படுத்த, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. திருவொற்றியூர் தியாக ராஜ சுவாமி கோவில் குளம், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில் குளம், மல்லிகேஸ்வரர் கோவில் குளம், அயனாவரம் காசி விஸ்வநாத சுவாமி கோவில் குளம். மேலும் ராயபுரம்அங்காள பரமேஸ்வரி கோவில் குளம், திருவட்டீஸ்வரர் கோவில் குளம், மயிலாப்பூர் விருப்பாச்சீஸ்வரர் கோவில் குளம் உட்பட, 17 கோவில் குளங்களை மேம்படுத்த, 1.75 கோடி ரூபாய்க்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.இத்திட்டத்தின் கீழ், குளங்களுக்கு பக்கவாட்டில் கற்கள் பதிப்பது, கரை அமைப்பது, நடைபாதை அமைப்பது,பாதுகாப்பு வேலி அமைத்து, மரங்கள் நடப்படும். மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மழைநீர் வடிகாலை முறைப்படுத்தி, மழைநீரை குளத்தில் சேர்க்க வழி ஏற்படுத்துவதுமான பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகளை மேற்கொள்வதற்காக, விரைவில் டெண்டர் கோரப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.