ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆடிப்பூர பால் அபிஷேக விழா
மேல்மருவத்துார் : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆடிப்பூர விழாவையொட்டி, அம்மனுக்கு பால் அபிஷேக விழா நடத்தப்பட்டது. மேல்மருவத்துாரில், ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இங்கு, கலசவிளக்கு வேள்வி பூஜையுடன், 25ல் ஆடிப்பூரம் துவங்கியது. நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கல இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கும், சுயம்புக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அடிகளார் வீட்டிலிருந்து, எடுத்து வரப்பட்ட தாய் வீட்டு கஞ்சி, கருவறை அம்மனுக்கு படைக்கப்பட்டது. காலை, 11:00 மணிக்கு, அம்மனுக்கான பாலபிஷேகத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாரும், பங்காரு அடிகளாரும் துவக்கி வைத்தனர். மண் கலயங்களில் பக்தர்கள் கொண்டு வந்த கஞ்சியை ஒன்று சேர்த்து, அருகில் உள்ள கிராமங்களுக்கு எடுத்து சென்று, அங்கு வசிப்போருக்கு வழங்கினர்.
கேசவராயன் பேட்டையிலிருந்து நீண்ட வரிசையில் வரும் பக்தர்களுக்கு, அன்னதானமும், குழந்தைகளுக்கு பால் ஆகியவற்றை, செவ்வாடை பக்தர்கள் வழங்கினர். நேற்று துவங்கிய பாலபிஷேக விழா, இன்று வரை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் மற்றும் கோயம்புத்துார் மற்றும் திருப்பூர் மாவட்ட ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டனர்.