திரிபுர சுந்தரி அம்மன் தீர்த்தவாரி: திருக்கழுக்குன்றத்தில் கோலாகலம்
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் திரிபுர சுந்தரி அம்மன் தீர்த்தவாரி நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றத்தில் புகழ் பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சித்திரை பெருவிழாவை அடுத்து திரிபுர சுந்தரி அம்மன் ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்று வருகிறது. தாழக்கோவிலான பக்தவச்சலேஸ்வரர் கோவிலில், 17ம் தேதி கொடியேற்ற வைபவத்துடன் துவங்கியது. இதை ஒட்டி, அம்மன், தினமும், தொட்டி, அதிகார நந்தி உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய விழாவான திருதேர்விழா, 23ல் நடந்தது. தொடர்ந்து 10ம் நாள் விழாவான நேற்று, விநாயகர், திரிபுர சுந்தரி அம்மன், அஸ்திரதேவர் தாழக்கோவிலிலிருந்து சங்கு தீர்த்த குளத்திற்கு வந்து தீர்த்தவாரி ஆடினார். பக்தர்கள் தீர்த்தங்களை தெளித்து வழிபட்டனர். இன்றுடன் திருக்கல்யாணப் பெருவிழா நிறைவடைகிறது.