மாகாளேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாகாளேஸ்வரர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது மாகாளேஸ்வரர் கோவில். இங்கு, ராகு, கேது பகவானுக்கு தனி சன்னதிகளும் உள்ளன. மூலவர் சன்னிதானத்தை சுற்றி நவக்கிரகங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. நேற்று ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பூஜையும், ஹோமமும் நடந்தது. ராகு, கேது சன்னதி முன், உளுந்து, கொள்ளூ பயறில் அகல் விளக்கு வைத்து வேப்ப எண்ணெயில் தீபம் ஏற்றி, பக்தர்கள் வழிபட்டனர்; பரிகார பூஜையும் நடந்தது.பகல், 12:48 மணிக்கு ராகு பகவான், சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும், கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்ந்தனர்.இதை முன்னிட்டு மாகாளேஸ்வரர் மூலவருக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. இந்த சிறப்பு பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.