வேடசந்தூரில் மலையேறி தரிசிப்போம் மல்லீஸ்வரனை
வேடசந்தூர்: திண்டுக்கல் - கரூர் மாவட்ட எல்லையையொட்டி உள்ளது ரெங்கமலை. இம்மலையின் அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ., உயரத்தில் உள்ளது மல்லீஸ்வரன் கோயில்.
கோயிலுக்கு செல்லும் வழி நெடுகிலும் பெரிய அளவிலான பாறாங்கற்களை பதித்து அக்காலத்திலேயே பாதையை உருவாக்கி இருக்கின்றனர். பாதையில் நிழல் தரும் மரங்கள், ஓரிடத்தில் யானைக்குழி, கிண்ணாரக்கல் என பலவும் உள்ளது.
மலைமீது ஏறிச்செல்வோர் அவற்றை ரசித்தபடியே செல்வர். மேலே செல்ல செல்ல மேனியை தழுவும் காற்று, குரங்குகளின் சேட்டை, தரைப்பகுதியில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள், நகரும் ஆட்களை ரசிக்காமல் இருக்க முடியாது.
மல்லீஸ்வரன் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனால் மக்கள் கூட்டம் ரெங்கமலையேறிச் செல்கிறது. ஆனால் ஆடி18ல்தான் அளவில்லாத கூட்டம் உள்ளது.
மலையேற வேண்டியிருப்பதால் இங்கு அதிகளவில் செல்வது இளைஞர், இளைஞிகள் கூட்டமே. கோயிலில் வழிபடுவதுடன், பூக்கட்டி போட்டு குறிகேட்பதும் நடக்கிறது. கோயில் உள்ள பகுதியில் மரங்கள் அதிகளவில் நிழல் தருவதால் அதில் அமர்ந்து உண்டு, உறங்கி, ஓய்வெடுத்து திரும்புகின்றனர்.
அங்குள்ள பாறைக்குழியில் (சுனை நீரில்) தேங்கிய மழைநீரில் உடல் நனைப்போரும் உண்டு. மலைப்பாதையில் ஐஸ் வியாபாரிகள் தவிர வேறெந்த கடைகளும் இல்லை.
மல்லீஸ்வரன் கோயிலுக்கும் மேலே மலை உச்சியில் 2 கி.மீ., உயரத்தில் உள்ளது (விளக்கு ஏற்றும்) கம்பம் எனும் உச்சிப்பகுதி. இங்கு செல்ல மொத்தம் 5 கி.மீ., மலைமீது நடக்கவேண்டும்.
மலையேற வேண்டும் என்ற காரணத்தால், முதியோரை தவிர்த்து, இளையோரே அதிகளவில் உள்ளனர். சமீப காலமாக கோயில் நிர்வாகம் மற்றும் பிரமுகர்கள் சார்பில் கோயிலுக்கு வருவோருக்கு சாப்பாடு, குடிநீர் வழங்கப்படுகிறது. இதனால் சமீபகாலமாக இப்பகுதியினருக்கு நல்ல பிக்னிக் ஸ்பாட் ஆகவும் விளங்குகிறது.