திருவள்ளூர் சாமி கும்பிட தடையா?ஆர்.டி.ஓ.,விடம் புகார்
திருவள்ளூர்: ஆடி வெள்ளி அம்மனுக்கு, கூழ் வார்த்து சாமி கும்பிடுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக, பாதிக்கப்பட்ட இருளர்கள், ஆர்.டி.ஓ.,விடம் புகார் அளித்தனர்.
திருவள்ளூர் வட்டம், உளுந்தை, உசேன் நகரம் கிராமத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:உசேன் நகரம் கிராமத்தில், 70 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குலதெய்வமாக வணங்கி வரும் கன்னியம்மன் கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு, கூழ் வார்த்து, சாமி கும்பிட்டு வருகிறோம்.இந்த நிலையில், இதே பகுதியில் வசிக்கும் மாற்று மதத்தைச் சேர்ந்த சிலர், சாமி கும்பிடக் கூடாது என, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, சாமி கும்பிட அனுமதி அளித்து, எங்களை மிரட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.