ஆவணி அவிட்டம்: தங்க கவசத்தில் அருள்பாலித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்
சின்னசேலம்: சின்னசேலத்தில் ஆவணி ஆவிட்ட விழாவை முன்னிட்டு கன்னிகா பரமேஸ்வரி அம்மன், தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். கோவிலில் ஆர்ய வைசியர்கள், நேற்று காலை பூணுால் மாற்றி அணிந்தனர். முன்னதாக கோவிலில் நேற்று காலை, கணேஷ் சர்மா தலைமையில், கணபதி ேஹாமம், காயத்திரி மந்திரங்கள் ஓதினர். இந்நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கினர்.
அவலுார்பேட்டை: அவலுார்பேட்டையில் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. மேல்மலையனுார் தாலுகா, அவலுார்பேட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு செல்வ விநாயகர் கோவிலில் பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. வாணிய சமுதாய மக்கள் திரளாக பூணுால் அணிந்து கொண்டனர். இதே போல் சாமூண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேவாங்கர் குலத்தினரும், வாசவி அம்மன் கோவிலில் வைசீயர்களும் பூணுால் அணிந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர், தில்லை கோவிந்தராஜபெருமாள், கன்னிகா பரமேஸ்வரி கோவில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு யஜுர் வேத சம்பிரதாயப்படி பூணுால் மாற்றிக்கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பிராமணர்கள், ஆரியவைசியர்கள், வாணியசெட்டியார், விஸ்வகர்மா உள்ளிட்ட சமூகத்தினர், கோவிலுக்கு சென்று பூணுால் மாற்றிக் கொண்டனர்.