உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் இனி மகிழ்ச்சிப்பயணம்... கந்தனுக்கு அரோகரா; ’ரோப்கார்’ வருது ஜோரா!

மருதமலையில் இனி மகிழ்ச்சிப்பயணம்... கந்தனுக்கு அரோகரா; ’ரோப்கார்’ வருது ஜோரா!

கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான ஆன்மிக சுற்றுலாத்தலம், மருதமலை. ஆண்டுதோறும் பல லட்சம் பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ள தமிழக அரசு, இங்கு ’ரோப்கார்’ வசதியை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. ஒரு காலத்தில், ஜவுளித்துறையில் மட்டுமே தனித்துவமான வளர்ச்சி பெற்றிருந்த கோவை மாநகரம், உயர் கல்வி, உயர் மருத்துவம், ஐ.டி.,துறை, ஆட்டொமொபைல்ஸ் என பல துறைகளிலும் பரவலான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இந்த வரிசையில், சமீபகாலமாக சுற்றுலாப் பயணிகளையும் கோவை பெரிதும் ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டில், சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் பிடித்தது; அதில், கோவையின் பங்களிப்பு, மிக அதிகம்.

சுற்றுலாப்பயணிகள் அதிகரிப்பு!

அருகில், நீலகிரி மாவட்டம் இருப்பதால், விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து வாயிலாக வருவோர், கோவைக்கு வந்த பின்பே, அங்கு செல்ல முடியுமென்பதும் இதற்கு முக்கியக் காரணம். இவற்றைத் தவிர்த்து, இங்குள்ள கோவைக்குற்றாலம், டாப்ஸ்லிப், வால்பாறை ஆகிய சுற்றுலா மையங்களுக்குச் செல்வோரும், கோவையை நாடி வருகின்றனர். இந்த வரிசையில், முருகனின் ஏழாம்படை வீடாகக் கருதப்படும் மருதமலையும், முக்கிய சுற்றுலா மையமாகவே மாறியுள்ளது. ஆன்மிகத்தலமாக மட்டுமின்றி, பசுமையும், குளுமையும் சூழ்ந்த மருதமலை, இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரின ஆர்வலர்களையும் பெரிதும் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில், இந்த கோவிலின் வருவாயும், ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதேநேரத்தில், இங்கு பக்தர்களுக்கான வசதியை இன்னும் மேம்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. அந்த வகையில், பக்தர்களின் சமீபத்திய எதிர்பார்ப்பு, ரோப்கார். மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தற்போது படிக்கட்டுகளில் நடந்தும், பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலமாகவும் செல்லலாம். இயற்கையை ரசித்தபடி, கோவிலுக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு, ’ரோப் கார்’ அமைக்க, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, தி.மு.க., ஆட்சியில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கு, அப்போதைய அறநிலையத்துறை அமைச்சர் முத்துக்கருப்பன் நடவடிக்கை எடுத்தார். அதற்குப்பின்பு வந்த அ.தி.மு.க., அரசு, இத்திட்டத்தை கிடப்பில் போட்டது. பல ஆண்டுகளுக்குப்பின், இத்திட்டத்தை துாசு தட்டி எடுத்துள்ளது, இந்து சமய அறநிலையத்துறை. இது பற்றி சென்னையிலிருந்து பல விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இரு முறை அறநிலையத்துறை அதிகாரிகளின் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டுள்ளது. திட்டச்செலவு, அதில் கிடைக்கும் வருவாய், புதிய ஊழியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களும் திரட்டப்பட்டு, அரசின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மருதமலையும், பழனிச்சாமியும்: அதன் அடிப்படையில், இத்திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை, முதல்வர் பழனிச்சாமி, விரைவில் வெளியிடுவார் என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது: மருதமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது; ஆண்டு வருவாய், 18 கோடி வரை உயர்ந்துள்ளது; தங்கரதம், தங்கமயில் வாகனம், வெள்ளிமயில் வாகனம், தங்கவேல், தங்கத்தாலான சேவற்கொடி, செங்கோல், தங்கக்கொடி மரம், தங்கம், வெள்ளி சப்பரம் என்று எண்ணற்ற சொத்துக்கள், சுவாமிக்கு பக்தர்களால் நேர்த்திக்கடனாக சமர்பிக்கப்பட்டுள்ளது. மருதமலை முருகனை தரிசிக்க மலைப்பாதை வழியாக ஐந்து தேவஸ்தான பஸ்கள் இயக்கப்படுகிறது. இது தவிர ’ரோப்கார்’ வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டோம், அதற்கான பரிந்துரைகள், தீர்மானங்களை அரசுக்கு சமர்பித்துள்ளோம், அடுத்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிப்பாக வெளிவரும் என்று நம்புகிறோம். இதை அமைத்தால், பக்தர்கள் வருகை, மேலும் அதிகரிக்கும். வருவாயும் 30 கோடி ரூபாயாக உயரும் என்றும் நம்புகிறோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைவர். மலையையும், கோவை நகரையும் ரோப்காரில் ரசித்தபடி, மேலே கோவிலுக்குச்சென்று, ’கந்தனுக்கு அரோகரா’ போடலாம். இதனால், மருதமலை பொதுவான சுற்றுலா மையமாகவும் மாறும்; அதற்கு, இந்த அறிவிப்பையும் வெறும் அறிவிப்பாகவே விட்டு விடாமல், விரைவில் நிறைவேற்ற வேண்டுமென்பதே, முதல்வர் ’பழனிச்சாமி’க்கு கோவை மக்கள் வைக்கும் வேண்டுதல். -நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !