மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகம விதிப்படி திருப்பணிகள்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆகம விதிப்படியும், ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் திருப்பணிகள் நடக்கிறது, என, கோவில் இணை கமிஷனர், நடராஜன் கூறினார்.
மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளம் மேல்பகுதியில், சிதிலமடைந்த பழைய கற்துாண்கள் மாற்றப்பட்டு, புதிய துாண்கள் பதிக்கும் பணி தெற்குப்பகுதியில் முடிந்துள்ளது. கிழக்கு பகுதியில் பழைய துாண்கள் அகற்றப்பட்டு, புதிய துாண் பதிக்கும் பணி துரிதமாக நடக்கிறது. சமீபத்தில், யுனெஸ்கோ நிறுவன பாரம்பரிய பண்பாட்டு ஆய்வுக்குழு மீனாட்சி அம்மன் கோவில் உட்பட சில கோவில்களில் ஆய்வு மேற்கொண்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் பழைய துாண்கள் மாற்றப்பட்டுள்ளன. அவை எங்கே போனது என தெரியவில்லை என, புகார் தெரிவித்தது. இது குறித்து இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: கோவில் திருப்பணிகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, 18 பேர் அடங்கிய ஆலோசனைக்குழு உள்ளது. இக்குழுவில் அனைத்துத்துறை வல்லுனர்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவின் பரிந்துரையின் படியே திருப்பணிகள் நடக்கின்றன. பொற்றாமரைக்குளம் தெற்கு, கிழக்கு பகுதிகளில் சிதிலமடைந்த மேற்கூரைகள் அகற்றப்பட்டு புதுப்பிக்கும் பணி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடக்கிறது. பழைய கற்துாண்கள், மீண்டும் பயன்படுத்த இயலாதபடி சேதம் அடைந்துள்ளது. அகற்றப்பட்ட, 72 துாண்களும் கோவில் வளாகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. திருப்பணிகள் ஆகம விதிப்படி நடக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.