பவுர்ணமி நிலவொளியில் ஜொலித்த அம்மன்
ஆர்.கே.பேட்டை;ஆடி அமாவாசை மற்றும் ஆடி பவுர்ணமி நாளில், அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.அதன்படி, நேற்று முன்தினம், பெருமாநல்லுார் ஓசூரம்ம, அத்திமாஞ்சேரிபேட்டை கன்னியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும், வங்கனுார் மற்றும் அம்மையார்குப்பம் அன்னியம்மன், வெள்ளாத்துார் வெள்ளாத்துாரம்மன், வங்கனுார் பச்சையம்மன் உள்ளிட்ட கோவில்களில், காலை முதல், இரவு வரை, சிறப்பு பூஜைகள் நடந்தன. வெள்ளாத்துாரம்மன் கோவிலில், காலை, 10:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, பகல், 12:00 மணிக்கு, சிறப்பு தீபாராதனை நடந்தது. தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து படைத்தனர். தங்களின் நேர்த்தி கடனை நிறைவேற்றும் விதமாக, ஆடு, கோழிகளை பலியிட்டனர். அசைவ விருந்து அமோகமாக நடந்தது. பவுர்ணமி நாளில், அம்மனை நிலவொளியில் தரிசனம் செய்வதற்காக, திரளான பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு கோவில் வளாகத்திலேயே தங்கி இருந்தனர். கிரகணத்திற்கு முன்பாக, இரவு, 7:00 மணிக்கு, அம்மன் சிறப்பு தரிசனம் நடந்தது. வெளியூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்திருந்த பக்தர்கள், தங்குவதற்கு, வெள்ளாத்துாரம்மன் கோவில் விடுதியில், இலவச தங்கும் வசதி செய்து தரப்பட்டிருந்தது.