பழநியில் ஆடி லட்சார்ச்சனை வெள்ளித் தேரோட்டம் நாளை நடக்கிறது
பழநி, உலக நலனுக்காக பழநி பெரியநாயகிம்மன் கோயிலில் நாளை (ஆக.11ல்) ஆடி லட்சார்ச்சனை வேள்வியும், வெள்ளித் தேரோட்டமும் நடக்கிறது. பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை விழா ஜூலை 17ல் துவங்கி ஆகஸ்ட் 11 வரை நடக்கிறது. ஆடி 1ல் சிவன், விநாயகரிடம் அனுமதி வாங்கி பெரியநாயகி அம்மன் சன்னதியில் சங்கல்பம் நடந்தது.
ஆடிமாத வெள்ளிதோறும் அம்மன் ஆபரணாதி, முத்தங்கி, சந்தனக்காப்பு, மீனாட்சி போன்ற அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தினமும் மாலை 6:30மணிக்கு மேல் நுாறாயிரம் மலர்களால் சிறப்பு லட்சார்ச்சனை இன்றுடன் நிறைவு பெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியாக நாளை ஆடி லட்சார்ச்சனை வேள்வியும், சுமங்கலி பூஜையும் நடக்கிறது. கடைசி வெள்ளியை முன்னிட்டு மகா அபிஷேகம், அம்மனுக்கு தங்கக்கவச அலங்காரம் செய்கின்றனர். இரவு 8:30 மணிக்குமேல் நான்கு ரத வீதிகளில் வெள்ளித் தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்(பொ) மேனகா செய்கின்றனர்.