குகை கோவிலில் இன்று வண்டி வேடிக்கை
சேலம்: குகை காளியம்மன், மாரியம்மன் கோவில் வண்டி வேடிக்கையை முன்னிட்டு, இன்று மாலை, போக்குவரத்தில் மாற்றம் செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆடிப்பண்டிகை முன்னிட்டு, சேலம், குகை காளியம்மன், மாரியம்மன் கோவிலில், இன்று வண்டி வேடிக்கை நடக்கிறது. அதில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வர். இதையொட்டி, போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. மாலை, 5:00 மணி முதல், திருச்சி பிரதான சாலையில், சீலநாயக்கன்பட்டி பைபாசில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் வாகனங்கள், தாதகாப்பட்டி கேட்டில் இருந்து, அன்னதானப்பட்டி ரவுண்டானா வழியாக திருப்பி விடப்படுகிறது. கொண்டலாம்பட்டி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், செவ்வாய்ப்பேட்டை வழியாக திருப்பி விடப்படுகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி மார்க்கமாக இயக்கப்படும் வாகனங்கள், மாலை, 5:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, பைபாஸ் வழியாக இயக்க, போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். பண்டிகை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையில், இரு உதவி கமிஷனர்கள், ஆறு இன்ஸ்பெக்டர்கள் உள்பட, 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க, 100 குற்றப்பிரிவு போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.