உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அந்தியூர் குருநாதஸ்வாமி கோவில் ஆடி பெரு தேர்திருவிழா துவக்கம்

அந்தியூர் குருநாதஸ்வாமி கோவில் ஆடி பெரு தேர்திருவிழா துவக்கம்

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையத்தில் உள்ள, குருநாதஸ்வாமி கோவில் புகழ் பெற்றது. நேற்று ஆடி பெரு தேர்த்திருவிழா கோலாகலமாக துவங்கியது.

ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும், கோவில் திருவிழாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள், பக்தர்கள், பொதுமக்கள் என, ஆயிரக்கணக்கானோர் வருகை தருவர். கடந்த மாதம், 19ல் பூச்சாட்டப்பட்டு, 26ல், கொடியேற்றுதல் நடந்தது. கடந்த, 2 முதல் வன பூஜை நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான மாடு மற்றும் குதிரை சந்தை, ஆடி பெரு விழாவுடன் நேற்று துவங்கியது. காலை, 11:00 மணிக்கு புதுப்பாளையம் மடப்பள்ளியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், காமாட்சியம்மன், பெருமாள்சாமி, குருநாதஸ்வாமி ஆகிய மூன்று தெய்வங்கள், பத்தர்கள் வெள்ளத்தில் வனக்கோவிலுக்கு சென்றது. முதலில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் காமாட்சியம்மனும், பின்னர், 60 ஆடி தேரில் பெருமாள்சாமியும், தொடர்ந்து குருநாதஸ்வாமியை பக்தர்கள் தங்களது தோளில் தூக்கிச் சென்றனர். சுவாமி வனக்கோவிலை வந்தடைந்ததும், சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முழுவதும், வனக்கோவிலில் அருள்பாலித்த சுவாமிகள், மீண்டும் இன்று அதிகாலை புதுப்பாளையத்தில் உள்ள மடப்பள்ளியை வந்தடைகிறது. 10, 11, 17 ஆகிய மூன்று நாட்களும் மூலஸ்தான மண்டப கோவிலில், பக்தர்களுக்கு சுவாமிகள் திவ்ய தரிசனம் கொடுக்கின்றனர்.

கால்நடை சந்தை: பழமை வாய்ந்த இக்கோவிலில், புகழ்பெற்ற கால்நடை சந்தை நடைபெறுவது தனி சிறப்பு. வெளி மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து உயர் ரக மாடுகள், குதிரைகள், ஆடுகள், பறவைகள் விற்பனைக்காகவும், கண்காட்சிக்காகவும் கொண்டு வந்துள்ளனர். பர்கூர் இன செம்மறை மாடுகள், காங்கேயம் காளைகள், ஓங்கோல் எனும் ஆந்திர மாடுகள், பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட குள்ள ரக மாடுகள், நாட்டு மாடுகள், ஜெர்சி, சிந்து போன்ற கலப்பின மாடுகள், காட்டியவாடி, மார்வார் எனப்படும் உயர்ரக குதிரைகள், போயர், ஜமுனாபாரி இன ஆடுகள், வெளிநாட்டு நாய்கள், பூனை, பறவைகள் என ஏராளமானவை கண்காட்சிக்கும், விற்பனைக்கும் கொண்டு வந்தனர். மாடு மற்றும் குதிரைகளுக்கு தேவையான சாட்டைகள், கயிறுகள், சலங்கை உள்ளிட்ட அலங்கார பொருட்கள், சந்தையில் குவிந்துள்ளன. வரும், 12 வரை கோவில் விழா நடக்கிறது. ஈரோடு மாவட்டம், பவானி டி.எஸ்.பி., ஜானகிராம் மேற்பார்வையில், 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !