பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம்
ஆட்டையாம்பட்டி: மாரியம்மன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில், ஏராளமான பக்தர்கள், ஓம்சக்தி கோஷம் முழங்க, தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஆடித்திருவிழாவை முன்னிட்டு, ஆட்டையாம்பட்டி பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று காலை குண்டம் இறங்குதல் நடந்தது. அதில், காப்புக் கட்டி விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், திருமணிமுத்தாற்றில் குளித்துவிட்டு, தலைமை பூசாரி வேலு தலைமையில், சக்தி கரகத்துடன் ஊர்வலம் வந்தனர். கோவிலை அடைந்த அவர்கள், வரிசையாக, குண்டம் இறங்கி, நேர்த்திக்கடனை செலுத்தினர். தேரோட்டத்தையொட்டி, உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து, சர்வ அலங்காரத்தில், தேரில் எழுந்தருளச் செய்தனர். தர்மகர்த்தா ரகுராஜ் தலைமையில், ஓம்சக்தி கோஷம் முழங்க, தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த தேர், முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மக்கள், அம்மனை வழிபட்டனர். இன்று அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், பூங்கரக ஊர்வலம், நாளை இரவு வண்டி வேடிக்கை, ஆக., 12ல் மஞ்சள் நீராட்டு வைபவத்துடன் திருவிழா நிறைவடையும்.
* தாரமங்கலம், கண்ணனூர் மாரியம்மன் கோவிலில், நேற்று, 5,000த்துக்கும் மேற்பட்டோர், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம், அலங்கரித்த தேரில், அம்மன் திருவீதி உலா நடந்தது.
*பனமரத்துப்பட்டி அருகே, ச.ஆ.பெரமனூர், பச்சையம்மன் கோவிலில், மானியக்காடு கிணற்றில் பக்தர்கள் நீராடி, பூஜை செய்து, கையில் காப்பு கட்டினர். அக்னி குண்டத்தில் இறங்கும் பக்தர்களை, பூசாரி சாட்டையில் அடித்து, ஆசி வழங்கினார். ஊர்வலம் வந்த பக்தர்கள், பச்சையம்மனை வழிபட்டு, அக்னி குண்டத்தில் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர். பின், முக்கிய வீதி வழியாக, சுவாமி ஊர்வலம் நடந்தது.