53 ஆண்டுக்கு பிறகு தனுஷ்கோடி கடற்கரையில் பூஜை: பக்தர்கள் ஆர்வம்
ராமேஸ்வரம், 53 ஆண்டுக்கு பிறகு தனுஷ்கோடி கடற்கரையில் பூஜை செய்ய பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். 1964ல் வங்க கடலில் ஏற்பட்ட புயல் புனித நகரம் தனுஷ்கோடியை தாக்கியதில் சர்ச், விநாயகர் கோயில், ரயில்வே ஸ்டேஷன் கட்டடம் இடிந்து சின்னாபின்னமாகியது. அன்று முதல் கடந்த ஜூலை 27 வரை தனுஷ்கோடி கடற்கரையில் பூஜை செய்து நீராட முடியாமல் பக்தர்கள் தவித்தனர். சிலர் கடற்கரை மணலில் ஜீப்பில் ஆபத்தான பயணம் செய்து பூஜை செய்தனர். பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நலன் கருதி மத்திய அரசு ரூபாய் 59 கோடியில் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை (9.5 கி.மீ.,துாரம்) வரை புதிய தேசிய சாலை அமைத்து, கடந்த ஜூலை 27 ல் பிரதமர் மோடி திறந்து வைத்தார். 53 ஆண்டுக்கு பிறகு தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்பட்டதால், தினமும் 300க்கு மேலான வாகனத்தில் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். மேலும் பக்தர்கள் வாகனத்தில் சிரமமின்றி தனுஷ்கோடி வந்து கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் பூஜை செய்து, நீராடி செல்வதில் ஆர்வமாக உள்ளனர். இதன் மூலம் 1964ம் ஆண்டுக்கு முன்பு தனுஷ்கோடியில் பூஜை செய்து, கடலில் நீராடும் ஆன்மிக மரபு மீண்டும் நடைமுறையில் வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.