ஞானபுரீஸ்வரர் கோவிலின் 220 ஏக்கர் நிலம் மீட்கப்படுமா?
திருவடிசூலத்தில், ஞானபுரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான, 220 ஏக்கர் நிலத்தை மீட்க, இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலையில், திருவடிசூலம் கிராமத்தில், ஞானபுரீஸ்வர் கோவில் உள்ளது.இங்கு, லிங்கம், மரகத பச்சைக்கல் லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தில் தேன் அபிஷேகம் செய்யும் போது, பச்சை வண்ணம் தோன்றும். திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். மலைகளின் இடையே, கற்சுரத்தில் அமைந்திருப்பதால், திருவிடைச்சுரம் எனப்படுகிறது. திருஞானசம்பந்தர், இத்தலத்துப் பதிகங்கள் முழுவதும், சுவாமியின் வண்ணமய அழகைப் புகழ்ந்து பாடியுள்ளார். திருவிடைச்சுரம் என்ற ஊர் பெயர், நாளடைவில் திருவடி சூலம் என, அழைக்கப்படுகிறது. இக்கோவிலுக்கு, திருவடிசூலம்,தேனுார், ஆமூர் ஆகிய கிராமங்களில், 220 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம், கடந்த பல ஆண்டுகளுக்கு முன் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், குத்தகை பணம் வசூல் செய்யப்படவில்லை.இதனால், கோவில் நிலங்களை, சிலர் தங்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்துஉள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, கோவில், சுற்றுச்சுவரில் செடிகள் வளர்ந்தும்,இடியும் நிலையில் உள்ளது.அம்மன் கோவிலிலும் செடிகள் வளர்ந்து உள்ளன. கோவில் உட்புறத்தில், மின் விளக்குகள் எரியாததால், சுவாமியை சுற்றி வரும் போது, பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கடந்த சில தினங்களாக பெய்த மழை நீர், கோவில்வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், கோவிலுக்கு சொந்தமான, 220 ஏக்கர் நிலத்தை மீட்க, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம், பொதுமக்கள் மனு அளித்து உள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, கோவில் நிலங்களை மீட்கவும், கோவிலை சீரமைக்கவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். -நமது நிருபர் -