பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம் : சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகர்
திருப்புத்துார்: சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு நாளை (ஆக.24) தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா ஆக.16ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை வெள்ளி கேடகத்தில் உற்சவர் புறப்பாடும், இரவில் மயில் வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி திருவீதி வலம் வருதலும் நடந்தது. இன்று காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் புறப்பாடும், இரவு 8:30 மணிக்கு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும் நடக்கும். நாளை காலை 8:30 மணிக்கு விநாயகர்,சண்டிகேஸ்வரர் ஆகியோர் தேரில் எழுந்தருளி வடம் பிடித்தல் நடைபெறும். மாலையில் தேரோட்டம் துவங்கி குடவறை அமைந்துள்ள மலையை வலம் வரும். மாலை 4:30 மணி முதல் மூலவர் சந்தனக் காப்பு அலங்கார தரிசனத்தில் பக்தர் களுக்கு காட்சியளிப்பார். இந்த அலங்காரம் மூலவருக்கு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். ஆக.25ல் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காலையில் கோயில் திருக்குளத்தில் உற்சவர் எழுந்தருள, குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரியும், இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கும்.