பிறர் தேவையே பெரிது!
ஸ்பர்ஜன் என்ற சொற்பொழிவாளர், லண்டனில் அனாதை விடுதி நடத்தி வந்தார். பிரசங்கத்திற்காக தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அனாதை குழந்தைகளை காப்பாற்றி வந்தார். ஒருமுறை பிரிஸ்டல் என்ற நகரத்துக்கு பிரசங்கிக்க சென்றார். அவருக்கு அப்போது 300 பவுன் தேவையாக இருந்தது. கர்த்தரின் அருளால் நினைத்தபடியே தொகையும் கிடைத்தது. மறுநாள் ஊருக்கு கிளம்புவதாக இருந்தார். தூங்கும் போது, கனவில் தேவனின் குரல் ஒலித்தது. அன்பரே! நீர் உமக்கு கிடைத்துள்ள தொகையை இவ்வூரில் மற்றொரு அனாதை விடுதி நடத்தும் எனது ஊழியரான ஜார்ஜ் முல்லரிடம் கொடுத்து விடு என்றது.
இந்த பணம் இல்லாவிட்டால், தனது விடுதிக்கு என்ன செய்வதென ஸ்பர்ஜனுக்கு புரியவில்லை. இருந்தாலும் தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து, ஜார்ஜ் முல்லரை தேடிச் சென்று பணத்தை ஒப்படைத்தார். முல்லர் ஸ்பர்ஜனிடம், நான் இப்போது தான் இந்தப் பணத்துக்காக தேவனிடம் ஜெபித்துக் கொண்டிருந்தேன். என் ஜெபத்தை கர்த்தர் ஏற்றார், என்றார். ஸ்பர்ஜன் லண்டனுக்கு திரும்பி விட்டார். அவரது மேஜையில் உறையிடப்பட்ட ஒரு கடிதம் இருந்தது. உள்ளே ஒரு நல்லவரின் கடிதமும், அத்துடன் அவர் அனாதை விடுதிக்காக அனுப்பிய 315 பவுன் பணமும் இருந்தது. வட்டியோடு சேர்த்து கடவுள் கொடுத்து விட்டார். நம்மை வருத்திக் கொண்டு நாம் பிறருக்கு உதவினால் இறைவன் நமக்கு பல மடங்காக உதவுவார் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு சான்று.