திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில்குளம் வறண்டது: பக்தர்கள் வருத்தம்
திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயில்குளம் வறண்டது: பக்தர்கள் வருத்தம்
திருப்புத்துார்: திருப்புத்துார் ஓன்றியம் திருக்கோஷ்டியூரில் வரத்துக்கால்வாய் துார்ந்ததால் பல ஆண்டுகளாக பெருமாள் கோயில்குளம் வறண்டிருப்பது பக்தர்களுக்கு வருத்தத்தைத் தந்துள்ளது. திருக்கோஷ்டியூர் சிவகங்கை மாவட்டத்தின் முக்கியமான ஆன்மிக சுற்றுலாத்தலமாகும். இங்கு 108 வைணவத்தலங்களுள் ஒன்றான சவுமியநாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.இக்கோயில் முன்பாக திருப்பாற்கடல் எனப்படும் கோயில் குளம் உள்ளது. நல்ல ஆழமாகஉள்ள இக்குளம் விரிவான படித்துறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இக்குளத்திற்கான வரத்துக்கால்வாய் பராமரிக்கப்படாததால் கடந்த பல ஆண்டுகளாக நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. இந்தாண்டு நல்ல மழை இருந்தும் தண்ணீர் வரத்து இல்லாதததால் இக்குளம் நிரம்பாமல் உள்ளது. இக்கோயிலுக்கான தெப்பக்குளமான ஜோசியர் ஊரணி எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படும் போது கோயில் முன்பாக உள்ள குளம் வறண்டு கிடப்பது பக்தர்களின் மனதை வருந்தச் செய்கிறது. மேலும் திருக்கோஷ்டியூர் பகுதி நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்பும் குறைந்து விட்டது. இதனால் குளத்திற்கான வரத்துக்கால்வாய்களை துார் வாரி சீரமைத்து நிரந்தரமாக தண்ணீர் வரத்து ஏற்படுத்த பக்தர்கள் கோரியுள்ளனர். இதே போன்று இக்கோயிலை சுற்றி வரும் தேரோடும் வீதியில் போடப்பட்ட தார்ரோடும் சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் புதுப்பிக்கப்படாமல் உள்ளது. ஆண்டிற்கு இரண்டு தேரோட்டம் நடைபெறும் இந்த ரோட்டை புதுப்பிக்க பல முறை கோரியும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் கோயில் முன்பாகஉள்ள கற்கள் பெயர்ந்த ரோட்டில் மழைநீர் தேங்கி பக்தர்கள் நடந்து செல்ல சிரமப்படுவதும், டூ வீலர்களில் செல்பவர்கள் தடுமாறுவதும் தொடர்கதையாகி விட்டது. எனவே ரோட்டை புதுப்பிக்க தேவையான நடவடிக்கை வேண்டியது அவசியமாகும்.