நடராஜர் மண்டகபடி மண்டபம்: புதர்கள் மண்டியுள்ள அவலம்
கிள்ளை : கிள்ளையில் தை மற்றும் மாசி மாதங்களில் நடராஜர் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் மண்டகபடி மண்டபம் சேதமடைந்துள்ளதுடன் புதர்கள் மண்டியுள்ளது.சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாசி மாதத்தில் தில்லையம்மன், பின்னத்தூர் பெருமாள், ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி, சிதம்பரம் நடராஜர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் இருந்து சுவாமிகள் தீர்த்தவாரிக்கு சென்று வரும் போது அங்குள் மண்டபங்களில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம்.சிதம்பரம் நடராஜர் தை அமாவாசை மற்றும் மாசி மகம் என இரு முறை கிள்ளைக்கு வருவதால் இந்த இரு மாதங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படும். இதற்காக அந்தந்த சுவாமிகளுக்கு தனித்தனியாக மண்டகபடி மண்டபம் உள்ளது.இதில் நடராஜர் சுவாமி, அரசு மேல் நிலைப்பள்ளி அருகில் உள்ள மண்டபத்தில் தங்கி அருள்பாலித்து வந்தார். இந்த மண்டபம் பழுதடைந்ததால் அமாவாசையில் தீர்த்தவாரிக்கு வருவது நிறுத்தப்பட்டது.மண்டபம் பழுதடைந்துள்ளதால் மாசி மாதத்தில் மகத்திற்கு மட்டும் நடராஜர் அழைத்து வரப்பட்டு மண்டபம் அருகில் பந்தலிட்டு கடந்த இரு ஆண்டுகளாக நடராஜர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார். தற்போது சிதம்பரம் நடராஜர் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்த மண்டபத்தை சரி செய்து நடராஜர் தை அமாவாசை மற்றும் மாசி மகத்திற்கும் தொடர்ந்து மண்டகப்படி செ#ய நடவடிக்கை எடுப்பதுடன், பழுதடைந்து புதர்செடிகள் மண்டி இடிந்து விழும் நிலையில் உள்ள மண்டபத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.