கனமழையால் மும்பை தத்தளித்தாலும் ’லால்பாக் ராஜா’வுக்கு குறையாத மவுசு
மும்பை: மும்பையில், கனமழை காரணமாக, விநாயகர் சதுர்த்தி விழா களை இழந்தாலும், ’லால்பாக் ராஜா’ விநாயகருக்கு, குறைவில்லாமல் காணிக்கை வந்து சேர்ந்துள்ளது. தெற்கு மும்பையில், லால்பாக் மார்க்கெட் பகுதி யில் உள்ள, ’லால்பாக் ராஜா’ விநாயகர் கோவில், பிரசித்தி பெற்றது. இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா, 11 நாட்கள் கொண்டாடப்படும். கோவில் வளாகத்தில் நிறுவப்படும் விநாயகர் சிலையை தரிசிக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள், பணம், தங்கம், வெள்ளியை காணிக்கையாக அளிப்பர். கடந்த ஆண்டு, காணிக்கையாக, 6.6 கோடி ரூபாய் கிடைத்தது; காணிக்கையாக அளிக்கப்பட்ட, தங்கம், வெள்ளியை ஏலம் விட்டதன் மூலம், 2.2 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த ஆண்டு, ஆக., 25ல், விநாயகர் சதுர்த்தி விழா துவங்கியது. மும்பையில், தொடர்ந்து கனமழை பெய்ததால், விழா களை இழந்தது. பெரும்பாலான பக்தர்கள், லால்பாக் கோவிலுக்கு வர முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், பிரமாண்ட ஊர்வலத்துக்கு பின், இக்கோவிலில் நிறுவப்பட்ட, ராஜ விநாயகர் சிலை, கடலில் கரைக்கப்பட்டது. விழா நிறைவு பெற்றதை அடுத்து, காணிக்கை எண்ணப்பட்டது. ஐந்து கோடி ரூபாய், ஒரு கிலோ எடையுள்ள தங்க விநாயகர், லட்சுமி சிலை, 250 கிராம் தங்க மோதகம், உண்டியலில் காணிக்கையாக செலுத்தப் பட்டிருந்தன. கனமழையால் மும்பை தத்தளித்தாலும், ’லால்பாக் ராஜா’ விநாயகருக்கு, பக்தர்களின் நன்கொடை மழைக்கும் குறைவில்லை.