உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மடப்புரம் கோயிலில் கல்வெட்டு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

மடப்புரம் கோயிலில் கல்வெட்டு: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில், அறங்காவலர் குழுத் தலைவர் ஜெய்சங்கர், தனது குடும்பத்தினர் பெயர் இடம்பெற்ற கல்வெட்டை பதித்ததற்கு, எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மே 4ல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு அங்கு சென்ற அறங்காவலர் குழுத் தலைவர் ஜெய்சங்கர், வாட்ச்மேன்கள் கருணாநிதி, பரஞ்சோதி, அழகர்சாமி ஆகியோரிடம் கோயிலுக்குள் பொருட்கள் வைக்க வேண்டும் எனக்கூறி, கதவை திறக்க கூறியுள்ளார்.

உள்ளே சென்ற அவர், அங்குள்ள அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் சுவரில் தனது தனது தாய், தந்தை, சகோதரர்கள் பெயர் இடம்பெற்ற கல்வெட்டை பதித்து விட்டு சென்றார். நேற்று காலை கோயிலுக்கு வந்த பக்தர்கள், தனிநபரின் கல்வெட்டு இருப்பதை அறிந்து, கோயில் நிர்வாகத்திடம் கேட்டனர். அதற்கு பதில் எதுவும் தரப்படவில்லை. அறங்காவலர் குழு உறுப்பினர் சீனிவாசன்: அறங்காவலர் குழுத் தலைவர் தன்னிச்சையாக தனது குடும்ப பெயர்களை கொண்ட கல்வெட்டை நள்ளிரவில் கோயிலுக்குள் வைத்துள்ளார். பொதுமக்களிடம் இருந்து நன்கொடை வசூலித்துதான் கோயில் திருப்பணிகள் நடந்தன. அறங்காவலர் குழு உறுப்பினர் கமலா: தினசரி கோயில் நடை இரவு 9:00 மணிக்கு சாத்தப்படும். அதன்பின் கோயிலை திறக்க அனுமதி இல்லை. உயரதிகாரிகள் வெளியூர் சென்ற நிலையில், திட்டமிட்டு கல்வெட்டை வைத்துள்ளனர். பொதுமக்கள் நன்கொடை மூலம் கட்டப்பட்ட கோயில் சுவரில், தனிப்பட்ட நபர்களின் பெயர் கொண்ட கல்வெட்டை வைத்தது தவறு. அறங்காவலர் குழுத் தலைவர் ஜெய்சங்கர்: அடைக்கலம் காத்த அய்யனார் கோயிலில் 30 சதவிகித வேலைகள்தான் நடந்திருந்தன. எனவே தீர்மானம் நிறைவேற்றி, மீதி 70 சதவிகித வேலைகளை எங்கள் குடும்பம்தான் செய்தது. எனவே நான் கல்வெட்டை இரவில் வைத்தேன்.

கோயில் நிர்வாக அலுவலர் செல்வி :நள்ளிரவில் கோயிலை திறந்து கல்வெட்டை வைத்தது தவறு. நாங்கள் சென்னைக்கு அலுவல் தொடர்பாக சென்றதை தெரிந்து கொண்டு திட்டமிட்டு வைத்துள்ளனர். கல்வெட்டை திரை மூடி வைக்க சொல்லியுள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !